உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மையில் இந்தியா முதலிடம்

245 0

உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. 

உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை தொடர்பாக சமீபத்தில் நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.  ஆன்லைன் மூலமாக 64 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 32000க்கும் மேற்பட்ட மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 
இந்த வாக்கெடுப்பு ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட நிதி நிலைமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதில் குறிப்பாக சீனா, இந்தோனேசியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில்  மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளன என்பது உறுதியானது.

2018ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்தியா 133 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸ் 131 புள்ளிகளையும், இந்தோனேசியா 127 புள்ளிகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகில் நுகர்வோர்  நம்பகத்தன்மையில் மிகவும் பின்தங்கிய நாடாக தென் கொரியா உள்ளது. இதற்கு அந்நாட்டின் உயரும் பணவீக்கம், குறைந்த ஊதியம், பங்குச்சந்தை சரிவு, வேலையின்மை, மற்றும் வர்த்தக சரிவு ஆகியவை காரணமாக கூறப்பட்டுள்ளது. 
2019ம் ஆண்டிற்கான அனைத்து நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றை காணும்போது, பல்வேறு நாடுகளில் நுகர்வோர் நம்பகத்தன்மை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிகிறது.  இதேபோல் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பகத்தன்மைக்கான வாக்கெடுப்பினை  13 முக்கிய நகரங்களில் நடத்தியது. இதில் கடந்த 2 ஆண்டுகளை விட நுகர்வோர் நம்பகத்தன்மை அதிகரித்திருப்பது தெரியவந்தது. இதனை பிரதிபலிக்கும் விதமாக தற்போது வெளியான உலகளாவிய வாக்கெடுப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.