அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் பலத்த சேதம் அடைந்திருப்பதுடன், 14 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று பயங்கர சூறாவளி தாக்கியது. இதனால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் விழுந்து நொறுங்கின. தொலைத் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்தன. இதனால் பலத்த சேதம் அடைந்துள்ளது.
குறிப்பாக, லீ கவுண்டியின் பீராகார்டு நகரில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லீ கவுண்டியில் சுமார் 5000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த சூறாவளி தொடர்பான விபத்துக்களில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.