தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்ததுமான வணக்க நிகழ்வானது 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், சிறிலங்கா அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும், விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர், ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவிவணக்கம், நினைவுப்பேருரை போன்றவற்றோடு நடைபெற்ற வில்லுப்பாட்டானது நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு