ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசமா?

460 0

மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கின்ற நிலையில், அந்த இடத்தை இம்முறை பிரித்தானியா நிரப்பவுள்ளது. அது எவ்வாறான பிரேரணையாக அமைந்திருக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி?

2015 செப்டம்பரில் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரப்போவதாக, அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2015 ஒக்டோபர் 14 இல், பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கி, அதனை முழுமையாக அமுல்படுத்துவதாக புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம், குறித்த பிரேரணையில் புதிய அரசியல் யாப்பு விடயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. குறித்த பிரேரணையில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் மட்டுமே பேசப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில் கடந்த மூன்று வருடங்களாக புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதான ஒரு தோற்றமும் காண்பிக்கப்பட்டது. அதனோடு சேர்த்து, உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் போன்ற விடயங்களும் பேசப்பட்டன. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைகளை தொடர்ந்து, அனைத்து விடயங்களும் முடங்கின. இவ்வாறானதொரு சூழலில்தான் மீண்டும் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் விவாதிக்கப்படுகிறது.

2017இல் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரின் போது, புதிய அரசாங்கம் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு, மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரியது. அப்போது அவ்வாறானதொரு கால அவகாசம் வழங்கப்படக் கூடாதென்று, சில தமிழ் சிவில் சமூகக் குழுக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கூட்டான கூட்டமைப்பு அவ்வாறானதொரு கால அவகாசம் வழங்கப்படுவதை ஆதரித்திருந்தது. அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கால அவகாசத்தை ஆதரிக்கும் புதிய பிரேரணை ஒன்றும் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளடங்கலாக ஏழு நாடுகள் அதற்கு பிரதான அனுரசனை வழங்கியிருந்தன. இதன் போது அமெரிக்க ராஜதந்திரிகள் குழுவிற்கு தலைமை தாங்கியிருந்த, வில்லியம் (William J. Mozdzierz) இந்தப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம், இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை பலப்படுத்துவது மற்றும் முரண்பாடுகள் மீளவும் இடம்பெறாமையும் உறுதிப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். 34வது கூட்டத் தொடரின் போது, இலங்கை பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கியிருந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹரிஸ்ச டி சில்வா, எங்கள் மீது நம்பிக்கை வைத்து, எங்களுடன், எங்கள் பக்கமாக நடப்பதற்கு இணங்கியமைக்கு தாம், சர்வதேச சமூகத்திற்கு நன்றிதெரிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இப்போது இலங்கைத் தீவு எந்த நிலையில் இருக்கிறது? இதனை விளங்கிக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரு கூற்று போதுமானது. அதாவது, 2015இல் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் பிரரேரணைக்கு இணையனுசனை வழங்கியமை தவறான ஒரு செயலாகும். அதிலிருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகிறோம். கொழும்பு நிலைமைகள் இவ்வாறு அமைந்திருக்கும் போது பிரித்தானியா கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் புதிய பிரேரணையின் உள்ளடக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும்? இதனை வலியுறுத்தக் கூடிய நிலையில் கூட்டமைப்பு இருக்கிறதா? கூட்டமைப்பின் வெளிவிவகார விடயங்கள் அனைத்தும், அதன் பேச்சாளராக அறியப்படும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் தலைமை இதனை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறது? சுமந்திரனை பொருத்தவரையில் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு ஜெனிவா விடயங்கள் விளங்காது. இவர்களுக்கும் இவர்களது கட்சிக்கும், சமஸ்டி என்றால் என்னவென்று தெரியாதென்றும் கூறியவர்தான் சுமந்திரன். சமஸ்டியே தெரியாத போது எவ்வாறு மனித உரிமைகள் பேரவையின் விடயங்கள் விளங்கப்போகிறது? இந்த பின்புலத்தில் நோக்கினால், கூட்டமைப்பு மீண்டுமொரு கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளவே வாய்ப்புண்டு.

UNHRC

இது தொடர்பில் சுமந்திரன் தரப்பிடம் ஒரு வாதம் உண்டு. அதாவது, இதனை எதிர்த்துவிட்டு என்ன செய்வது? தொடர்ந்தும் இலங்கையை ஜ.நாவின் கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டுமாயின் கால அவகாசம் வழங்கப்படுவதை தவிர வேறு வழியில்லை. சுமந்திரன் கூறும் வாதத்தைத்தான் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஓப்புவிக்கப் போகின்றனரா? இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். அதாவது, கூட்டமைப்பின் அணுகுமுறையை விமர்சிக்கும் உங்களிடம் இருக்கின்ற மாற்று உபாயம் என்ன என்றும் ஒருவர் கேட்கலாம்.

ஜ.நாவின் நிகழ்சிநிரலுக்குள் தொடர்ந்தும் இலங்கையை வைத்திருக்க வேண்டும் என்பது சரியானது. அதில் முரண்பட ஏதுமில்லை. ஆனால் எவ்வாறு வைத்துக்கொள்வது என்பதில்தான் முரண்பாடுகள் உண்டு. இதுவரை ஜ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளை தரவில்லை. இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும் கூட, எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக, எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிப்பட்டாலும் கூட, கொழும்பில் அரசியல் உறுப்பாடு இல்லையென்றால் எதனையும் முன்னெடுக்க முடியாது. அரசியல் உறுதிபாடின்மையை காரணம் காட்டியே கொழும்பு இந்த விடயங்களை கிடப்பில் போடமுடியும். மைத்திரிபால – ரணில் முரண்பாடு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இவ்வாறானதொரு சூழலில் ஜ.நா நிகழ்சிநிரலின் ஊடான அழுத்தத்தின் பரிமாணத்தை மாற்றுவதற்கான கோரிக்கையைத்தான் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். அதாவது, ஜ.நா.மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்ட விடயத்தை ஜ.நா பொதுச் சபைக்கு கொண்டு செல்லுமாறு கூட்டமைப்பு கோரலாம். அது நடக்குமா நடக்காதா என்னும் விவாதம் இப்போது தேவையற்றது. அதற்காக பாதுகாப்புப் பேரவைக்கு கொண்டுபோகுமாறும் கூற முடியாது.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுத்ததா அல்லது இல்லையா என்பதுதான் இங்கு கேள்வி. புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவரப்போவதாக கூறும் பிரித்தானிய தரப்பிடம் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைக்க முடியும். ஒரு வேளை கால அவகாசம் கொடுப்பதில்தான் மேற்குலகம் உறுதியாக இருக்கும் பட்சத்தில், அந்த கால அவகாச திட்டத்திற்குள் இந்தக் கோரிக்கைiயும் உள்ளடக்கியவாறான புதிய பிரேரணையை ஒன்றை கொண்டுவருமாறு கோரலாம். ஜ.நாவின் தலையிடும் எல்லை என்பது சக்திவாய்ந்த நாடுகளின் நலன்களால் கட்டுப்படுத்தப்படக் கூடியது. அந்த வகையில் ஜ.நா பலவீனங்கள் கொண்ட அமைப்புத்தான் ஆனாலும் அதனை விட்டாலும் வேறு வழியில்லை. எனவே கூட்டமைப்பு போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பது உண்மையானால், இவ்வாறானதொரு நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டும். இதனையும் விட சிறப்பான நிலைப்பாடு ஏதேனும் இருக்குமாயின் அது தொடர்பிலும் சிந்திக்கலாம்.

யதீந்திரா