கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்த நடவடிக்கை!

569 0

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதை சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் மீறியது என புகார் எழுந்தது. மேலும், அந்த நிறுவனத்தின்மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தி உள்ளது.

இந்த நிலையில், கனடாவின் வான்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் வான்கூவர் நகரில் உள்ள தனது இல்லத்தில்தான் தங்கி இருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகளின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.

இதற்கிடையே அவரை நாடு கடத்துவதற்கு அனுமதி அளிப்போம் என்று கனடா அரசு இப்போது அறிவித்து, அதற்கான நடைமுறைகளை தொடங்கி உள்ளது. இருப்பினும் இறுதி முடிவை கோர்ட்டுதான் எடுக்கும் என்றும் கூறி இருக்கிறது.

கனடா அரசின் முடிவுக்கு, ஒட்டவா நகரில் உள்ள சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அரசியல் துன்புறுத்தல் என சாடி உள்ளது.

இருந்தபோதும் இதில் 6-ந்தேதி பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.