கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிசாருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில், எதிர்வரும் 10ஆம் திகதி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி நகரப்பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று இரு வாகனச் சாரதிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிசார் சம்பந்தப்பட்ட சாரதி ஒருவர் மீது இரும்புச்சங்கிலியால் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
இது தொடர்பான காணொளிகள் புகைப்படங்கள் இணையத்தளங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
பொலிசாரின் மூர்க்கத்தனமான தாக்குதலின் படுகாயமடைந்த சாரதி உடனடியாக கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக குறித்த சாரதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு இடையூறு விளைவித்தமை என்ற குற்றச்சாட்டுத்தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதிவான் திரு.எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மன்றுக்கு சமூகமளித்து அறிக்கையிடுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.