எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

317 0

201610041017408314_5-people-captive-capture-pudukkottai-fishermen-sri-lanka_secvpfஎல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 76 விசைபடகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 223 விசைப் படகுகளிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்லம் செட்டி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தங்கமணி (50), பிரதீப் (23), அருண் (21), சண்முகவேல் (35), கோபு (27) ஆகிய 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 5 பேரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 பேரையும் விசைப்படகுடன் சிறைப்பிடித்தனர்.

இதையடுத்து அவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே 5 பேர் சிறை பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 5 பேரையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு சங்க தலைவர் ராமதேவன் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடலில் மீன்வரத்து குறைந்ததால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த வாரம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வரத்து குறைவு காரணமாக இழப்பை கருத்தில் கொண்டு நேற்று 200 விசைப்படகுகளுக்கு பதில் 76 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் 5 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகிறார். அவர் வரும் சமயத்தில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகையும் விடுவிக்க வேண்டும். ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றார்.

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.