காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து விவசாய சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பி.ஆர். பாண்டியன் (தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்):-
காவிரி பிரச்சினையில் அரசியல் லாப நோக்கோடு கார்நாடகாவுக்கு ஆதரவாக அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தற்போது கர்நாடகாவை சேர்ந்த மத்திய மந்திரிகளின் நெருக்கடிக்கு பயந்து அதே அட்டர்னி ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலாண்மை வாரியத்தை அமைக்க சொல்வதற்கு அதிகாரமில்லை. நடுவர் மன்றம் ஒரு பரிந்துரைதான் என்று கூறியிருக்கிறார்.
உண்மைக்கு புறம்பாக அரசியல் சட்டத்துக்கு முரணாக மத்திய அரசு சார்பில் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமலே சுப்ரீம் கோர்ட்டில் எழுத்து பூர்வமாக இவ்வாறு அளித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை களங்கப்படுத்துவதாகும்.
இந்த பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும்.மணியரசன் (காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர்):-
பிரதமர் மோடி அரசு கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே நடுநிலையோடு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்கு மாறாக பாகுபாடு காட்டி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இந்த அநீதியான நிலைப்பாடு காவிரி உரிமையை தமிழகம் நிரந்தரமாக இழந்து விட வேண்டும் என்ற முடிவில் தான் கொண்டு போய் விடும். இன்று நடைபெற உள்ள சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையை திசை திருப்புவதற்காக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதாக கூறி உள்ளது. இந்த ஏமாற்று வித்தைக்கு சுப்ரீம் கோட்ட்டு ஏமாந்து விடக் கூடாது.
ஜீவக்குமார் (விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர்):-காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.அதனை செய்ய தவறுவதால் 1956-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவா சட்டம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகிய மூன்றையும் மத்திய அரசு மீறுவதாக உள்ளது.
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறுவது தேசிய இறையாண்மைக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
சாமி. நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்):-
மத்திய அரசின் பதில் மனுவானது காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவாகவும், தமிழக விவசாயிகளுக்கு எதிராகவும் இருப்பதையே காட்டுகிறது.சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு தொடர்ந்து அமல்படுத்த மறுப்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம்.
சுவாமிமலை சுந்தர. விமலநாதன் (தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர்):-
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு இது போன்ற நிலைப்பாட்டை எடுத்து மனு தாக்கல் செய்திருப்பது துரதிருஷ்டம்.மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சினையில் இதுவரையில் அமைதி காத்து விட்டு, இப்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு செல்லாது என கூறுவது நீதிக்கு புறம்பானது.இதில் ஏதோ உள்நோக்கமும், அரசியல் அழுத்தமும் இருப்பதாக தெரிகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.