இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப்போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நனவாகாத கனவை எண்ணிக்கொண்டு சந்தர்ப்பங்களை தவறவிடாது நாம் அனைவரும் ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு மக்களுக்கு அபிவிருத்திக்கான பாதையை உருவாக்கிக்கொடுத்து அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாதிகஹெல உறுமைய கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெற்றமை மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆனால் அவை எதுவுமே யுத்த திட்டமிட்ட அழிப்பு அல்ல. போர்க்குற்றச்சாட்டில் இராணுவத்தை தண்டிக்க வேண்டுமென்றால் அதே குற்றங்களில் விடுதலைப்புலிகளையும், இந்திய அமைதிப்படையையும் ஏனைய தரப்புகளையும் தண்டிக்க வேண்டும்.
ஆகவே உண்மைகளை கண்டறிவது விடுத்து தீர்வுகளை நோக்கி பயணிப்போம் என்றார்.