மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்- முதலமைச்சர் பழனிசாமி தாக்கு!

265 0

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவை ரூ.66 கோடியில் மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாஇன்று (வியாழக்கிழமை) திருப்பூர்- காங்கயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தெரியாமல் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. இது மக்கள் விரோத ஆட்சி என பேசிவருகிறார்.

வேண்டும் என்றே மக்களை குழப்பி வருகிறார். எத்தனையோ கனவு கண்டார். அத்தனை கனவுகளும் கானல் நீராகிவிட்டது. அம்மா இறந்தவுடன் அ.தி.மு.க. உடைந்து விடும் என கனவு கண்டார். அது நடக்கவில்லை. அதன் பிறகு ஆட்சி இன்று கலைந்து விடும், 6 மாதத்தில் கலைந்து விடும். இன்னும் ஒரு ஆண்டு மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கும் என நினைத்தார்.

ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-வது ஆண்டையும் தொடங்கியுள்ளோம். தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பாலம் கட்ட அடிக்கல் நாட்டி அப்படியே நிறுத்திவிட்டனர். ஆனால் அந்த பாலப்பணிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

தற்போதைய அ.தி.மு.க. அரசு அனைத்து அதிகாரிகளுடன் ஒரு முறைக்கு பல முறை ஆலோசனை நடத்தி சரியான முறையில் திட்டமிட்டு ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறோம். மத்திய, மாநில அரசு இணைந்து திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம்.

இந்த திட்டங்கள் அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும். 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூருக்கு வருபவர்கள், இது திருப்பூரா, அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று யோசிக்க தோன்றும் அளவுக்கு திருப்பூர் மாறிவிடும்.

இந்த திட்டங்கள் குறித்து எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. இதற்காகத்தான் இந்த திட்டங்கள் மூலம் திருப்பூருக்கு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை எல்.இ.டி. டிவி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அ.தி.மு.க. அப்படி அல்ல. விசுவாசமாக பணியாற்றும் ஒவ்வொரு தொண்டனுக்கும் வீடு தேடி பதவி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. திருப்பூரில் 2-வது கூட்டு குடிநீர்திட்டத்தை எம்.ஜி.ஆர். அரசு நிறைவேற்றியது. 3-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இன்று 4-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா வழியில் வந்த அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இன்று நடைபெற்ற விழாவில் 10 பணிகளுக்கு 1807 கோடியே 45 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதும் நாங்கள் தான், 2 ஆண்டுகளில் பணிகளை முடித்து நாங்களே வந்து திறந்து வைப்போம். திருப்பூரில் மட்டும் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் ஊர், ஊராக சென்றாலும் சரி, தெரு, தெருவாக சென்றாலும் சரி, மக்கள் அவரை பற்றி நன்கு அறிந்து வைத்து உள்ளனர்.

இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மின்சார துறை, உள்ளாட்சி துறை, போக்குவரத்து துறை என ஒவ்வொரு துறையும் சிறப்பாக செயல்பட்டதற்காக அ.தி.மு.க. அரசு விருது பெற்று இருக்கிறது.

மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 14 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிகணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அம்மா அரசு தொழிலாளர்களின் நலன் கருதி 2 ஆயிரம் ரூபாயை அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிலர் விடுப்பட்டு உள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். உடனே அதிகாரிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளேன். விடுப்பட்டுள்ள அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை வருகிற 4-ந்தேதி சென்னையில் நான் தொடங்கி வைக்கிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்து கொண்டு இருக்கிறோம். பொது விநியோக துறை, மருத்துவ துறை போன்றவற்றில் சிறப்பான சேவையை செய்து வருகிறோம். இன்னும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக அறிந்து செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எம்.பி.க்கள் சத்திய பாபா, மகேந்திரன், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜய குமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, எம்.எஸ்எம். ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.