தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர் வெட்டு அமுல்படுத்தபட்டமையினால் ஹட்டன் நகரை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் பாவனையாளர்கள் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளானதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 26 ஆம் திகதி தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் ஹட்டன் நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வாறு திடீரென முழுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் அதிகளவு வறட்சி நிலவிவருவதால் இவ்வாறு நீர்வெட்டு நிகழ்ந்தமையினால் அரச வேலைகளுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹட்டன் நகரில் மட்டும் சுமார் 30 ஆயிரம் மக்கள் உள்ளதாகவும் அதில் 5550 குடும்பங்கள் அடங்குவதாகவும் 95 வீதமானோருக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மேலும் ஹட்டன் நகருக்கு சிங்கமலை சுரங்க வனப்பகுதியில் இருந்து முறையாக நீரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என பாவனையாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் ஹட்டன் தேசிய நீர் வழங்கல் திணைக்கள காரியாலய அதிகாரியிடம் கேட்டபோது “ தற்போது ஏற்பட்டு வரும் வறட்சியின் காரணமாக நீர் சேகரிப்பானது மிகவும் குறைந்துள்ளது. ஆகையால் இனிவரும் காலங்களில் இருதினங்களுக்கு ஒரு தடவை நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளோம்.
மேலும் இன்னும் ஓரிரு வாரங்களில் மலையக பகுதிகளில் வரட்சி நிலைமாறி மழைபெய்யத் தொடங்கும் அப்போது முன்னரைப் போல நீர் வழங்கல் சீராக காணப்படும் என அவர் தெரிவித்தார்.