பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் மிகவும் மெதுவாகவே பயணிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு, இலங்கை குறித்து ஆராயப்படவுள்ள நிலையில் உங்களின் கருத்து என்னவென அவரிடம் வினவியபோதே அலைனா பி. டெப்லிஸ்ட் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் கொண்டுவந்த தீர்மானங்ககளை நடைமுறைப்படுத்த நாம் தொடர்ந்தும் செயற்படுவோம்.
கடந்த முறை கொண்டுவரப்பட்ட பிரேரணையில் உள்ள காரணிகள், இலக்குகளை அர்ப்பணிப்புடன் அடைதல் , நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், உண்மைகளை கண்டறிதல் பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை கையாள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இலங்கை அரசாங்கம் அந்த இலக்குகளை அடைவதற்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். இந்த இலக்குகளை அடைய இலங்கை அரசாங்கத்துடனும், சிவில் சமூகத்துடனும், பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் இணைந்து இலக்குகளை அடைவதற்கு நாங்கள் முயற்சிகின்றோம்.