வங்காளதேச விமான கடத்தல் முயற்சியின் பின்னணி குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு 148 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், கையில் துப்பாக்கியுடன் விமானிகள் அறைக்குள் சென்று தான் விமானத்தை கடத்துவதாக கூறினார். அதனை தொடர்ந்து சிட்டிகிராம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது அந்த பயணி தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும், பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் விமானத்தை தகர்த்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனை தொடர்ந்து விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்த கமாண்டோக்கள் அவரை சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில் டாக்காவை சேர்ந்த முகமது அமீது (வயது 25) என்ற அந்த பயணி, தனது மனைவி உடனான பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக விமானத்தை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும், வெடிகுண்டுகள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது.