ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாக். அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர்கள் 5 பேர் காயம்

233 0

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியான ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கியது. நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின. 

இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.

இதனிடைய இந்தியாவின் தாக்குதலையடுத்து ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களது வீடுகளில் இருந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.  

பாகிஸ்தான் கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறியரக குண்டுகளை வீசி இந்திய எல்லையில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்  இந்திய ராணுவத்தினரும் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தனர்.