சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி வரை பிற்போட கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது, இந்த வழக்கை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாகவும், இதன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரைய வழக்கை ஒத்தி வைக்குமாறும் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி விடயத்தைக் கருத்திற் கொண்ட நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதம் 29ம் திகதி வரை பிற்போட கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.