தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டு மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் : மு.க.ஸ்டாலின்

311 0

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டு மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மேல கூட்டுறங்காடு ஊராட்சியில் நேற்று நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில், கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையாக முன்வைத்தனர்.

அதன்பின்னர், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், கனிமொழி எம்.பி., தி.மு.க. முதன்மை செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தலைவர் கருணாநிதி இந்த தமிழ்நாட்டுக்கு செய்திட்ட திட்டங்களை எல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். குறிப்பாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றியதை எல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதேபோல், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை சேர்த்து ஒரே பெயரில் “தேவேந்திரகுல வேளாளர்” என்று பெயரிட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தி.மு.க. ஆட்சி இருந்தபோது தலைவர் கருணாநிதியிடம் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டு, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை அழைத்து அவர் பேசினார். அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் கோரிக்கையினை ஆய்வு செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் என்று 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தார். அறிவிப்போடு நில்லாமல் உடனே ஒரு நபர் கமிஷன் அமைத்து அரசிதழில் வெளியிட்டார் தலைவர் கருணாநிதி.
ஆனால், அரசு ஆணை வெளியிடுவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் முறையாக என்ன செய்திருக்க வேண்டும், கோட்டையில் ஏற்கனவே இதுகுறித்து இருந்த கோப்புகளை எடுத்து, நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், குப்பையில் போட்டுவிட்டார்கள்.
ஆகவே, இப்போது சொல்கிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தலைவர் கருணாநிதியால் நியமிக்கப்பட்ட அந்த கமிஷன் அறிக்கையை, கையில் எடுத்து நீங்கள் விரும்பக்கூடிய வகையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஆணை வெளியிடப்படும் என்கிற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை. 13 பேரை சுட்டுக்கொன்ற கொடுமை. இது எதார்த்தமாக நடந்த சம்பவம் அல்ல. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்துகொண்டு செய்திட்ட சம்பவம். தனியார் கம்பெனியிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த காரியத்தை அவர்கள் செய்தார்கள். இப்போது என்ன நிலை, அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு அந்த ஆலையை திறக்கக்கூடாது என உத்தரவு வந்துவிட்டது. ஆனால், எந்த நிலையிலும் திறக்க வாய்ப்பு இருக்கிறது.
அதனால் தான், நான் சட்டமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி இதனை கொள்கை முடிவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதன் பின்னர், சட்டமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதை நான் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இன்றைக்கு நிறைவேற்றாத கொடுமை. ஆகவே, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்து பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.