ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சாடா மாகாணத்தில் சவுதி அரேபியாவின் எல்லையையொட்டி உள்ள அல்–புக்கா நகரில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 60–க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவின் தெற்கு எல்லை மாகாணமான நஜ்ரானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் செய்தி சேனலில், அல்–புக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.