ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் போலி ரசீதுகளை தாக்கல் செய்து ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாங்காத பொருட்களை வாங்கியது போல ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ராய்காட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி.யில் ரூ.650 கோடி செலவுக்கான ரசீதுகளை தாக்கல் செய்து, கட்டிய வரியில் ரூ.110 கோடியை திரும்ப பெற்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர் .
அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்த ரகேஷ் அனுமன் பிரசாத் (வயது38), அவரது உறவினர் ஆனந்த் (40) ஆகியோர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.110 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்காத பொருட்களுக்கு போலி ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகேஷ் அனுமன் பிரசாத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.