பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டு வருகின்றது. அதனால் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொண்டே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது ஜெனிவாவில் மனித உரிமை பேரவை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிவரை இடம்பெறுகின்ற இந்த கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாவும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றது. அந்த தினத்துக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி இதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் அரசாங்கம் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது மிகவும் ஆபத்தானதாகும். அதன் உள்ளடக்கங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் சாதாரண சட்டத்துக்கும் அப்பாற்பட்டதாகவே காணப்படுகின்றன. இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால் பொலிஸுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கின்றன. இதன்மூலம் அரசாங்கம் பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகவும் இருக்கலாம். அதற்கான சாத்தியமும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.