திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – திருமாவளவன்

360 0

திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைமையிலான கூட்டணி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி. தமிழகத்தில் முதலில் உருவான கூட்டணி. தி.மு.க. கூட்டணி 9 கட்சிகளை கொண்டதாக விளங்குகிறது.

இந்த கட்சியில் சுமூகமாக, இணக்கமான முறையில் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இரண்டொரு நாட்களில் தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்படும். நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் சனாதன சக்திகளுக்கு எதிரான தர்ம யுத்தம்.

அகில இந்திய அளவில் பல சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்ற வகையில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்போம்.

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு எதிரான உளவியல் மக்களிடையே உள்ளது.

எனவே இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.

உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாக விளக்கம் கூறியுள்ளார்.

நண்பர் என்ற முறையில் நானும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. உடல் நலம் குறித்து விரைவில் விசாரிப்பேன்.

தே.மு.தி.க. தேர்தல் தொடர்பாக எந்த நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தி.மு.க. தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.