மண்டியா மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்துள்ளதாக நடிகர் அம்பரீஷ் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது சுமலதா அம்பரீஷ் கூறினார்.
நடிகர் அம்பரீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் காங்கிரசில் இருந்தார். சித்தராமையா மந்திரிசபையில் இடம் பெற்று பணியாற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சுமலதாவை அம்பரீசின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசிய சுமலதா, பாராளுமன்ற தேர்தலில் தான் மண்டியா தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாகவும், காங்கிரஸ் சார்பில் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.
கூட்டணியில் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் டிக்கெட் கிடைக்காவிட்டால், மண்டியாவில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
அவரை தங்கள் கட்சிக்கு இழுத்து போட்டியிட வைக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் மண்டியா மக்களுக்கு சேவையாற்ற தான் தயார் என்று சுமலதா அறிவித்துள்ளார்.
நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்து 3 மாதங்கள் ஆவதையொட்டி, அவரது மனைவி சுமலதா உள்பட குடும்பத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்களுக்கு சேவையாற்ற நான் முடிவு செய்துள்ளேன். ஆனால் அதற்காக அரசியல் தந்திரத்தில் ஈடுபட மாட்டேன். அம்பரீஷ் காங்கிரசில் இருந்தார். அதனால் மக்கள் பணியாற்ற காங்கிரசில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
மண்டியா மக்கள் வலியுறுத்தியதால், மக்கள் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளேன். அம்பரீசின் அன்பு, என்னை இதுவரை அழைத்து வந்துள்ளது. மண்டியா மக்களுடன் நான் எப்போதும் இருப்பேன்.இவ்வாறு சுமலதா கூறினார்.