வடக்கு மாகாண முதலமைச்சரின் எழுக தமிழ் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வடக்கில் தொடரும் சிங்கள, பௌத்த மயமாக்கல் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, இன்று கொழும்பில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் மகளிர் பிரிவினரே இந்த போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக திரண்ட சுமார் ஐம்பது பேர் வரையிலான பெண்கள், இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில், இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த கருத்துக்களை அவர் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதை இனவாதமாக அடையாளப்படுத்தி, தன்னை ஒரு இனவெறியனாக காட்ட தென்பகுதி சிங்களக் கட்சிகள் முயன்று வருவதாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களத்தில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையிலும், அவரை இனவாதியென்றும், அதற்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் தெரிவித்து விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் மகளிர் பிரிவினரைக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் மேற்குலக நாடுகளின் அடிவருடிகளாக செயற்பட்டு வருவதாகவும், அதனாலேயே மேற்குலகை திருப்தி படுத்துவதற்காக நாட்டை பிளவுபடுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பை தயாரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.
ஏராளமான படையினர் தமது உயிர்களை தியாகம் செய்தும், அவயவங்களை பறிகொடுத்தும் ஒருங்கிணைத்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்தி பிரிவினைவாதிகளுக்கு சார்பாக செயற்படுவதன் ஊடாக, மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் மகளிர் பிரிவினர் வலியுறுத்தினர்.