இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நியூசிலாந்து நிதி அமைச்சர் பில் இங்கிலீஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து வெலிங்டன் நகரில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது இலங்கை முகம் கொடுத்துள்ள பொருளாதார மற்றும் நிதி சவால்கள் தொடர்பிலும் கலந்து உரையாடப்பட்டதாக பிரதமரின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெலிங்டன் நகர ஆளுனர் ஸ்ரீமதி பற்றீசி ரட்டையும் சந்தித்தார்.
இலங்கையின் சினிமாதுறையை நவீன மயப்படுத்தவும் தேசிய திரைப்பட அபிவிருத்தி சபை ஒன்றினை ஸ்தாபிக்கவும், நியூசிலாந்தின் அனுபவம் மற்றும் ஒத்துழைப்பு மாத்திரமின்றி தமது தனிப்பட்ட ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஆளுனர் இந்த சந்திப்பின் போது அறிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பு சர்வதேச சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இலங்கையின் புதிய அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.