இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த சூழலில், திடீரென இவ்வாறு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனு மீதான விசாரணையின் போதே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய காலக்கெடு நிறைவடைய இருக்கும் நேரத்தில் மத்திய அரசு அதனை அமைக்க முடியாது என்று அறிவித்துள்ளமை ஏன் என்றும், நீதிபதிகள் வினா எழுப்பினர்.
இதற்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கைகளை எடுக்கின்ற நேரத்தில் தான், எழுகின்ற சிக்கல்களை நாடாளுமன்ற அனுமதியோடு மேற்கொள்ள வேண்டியது தெரியவருகிறது என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இந்நிலையில், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பில், இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு கூறியிருக்கும் விவகாரத்திற்கு, திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்;. ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?” என்பதை போல மத்திய அரசின் செயற்பாடுகள் உள்ளன என விமர்சனம் செய்துள்ளார்.
இதேவேளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் இந்த விவாகரத்திற்கு கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் சூழ்ச்சியால் தான் தமிழத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.