மத்திய வங்கி ஊழலில் ஜனாதிபதிக்கும் தொடர்புள்ளதா? – ஜே.வி.பி

313 0

பாரிய ஊழல் குற்றவாளிகள் விடயத்தில் ஜனாதிபதி மெளனம் காப்பதனால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பின்னணியில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. அதேபோல் இந்த ஊழல்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைகுழு அறிக்கை ஒரு வருடகாலமாக ஜனாதிபதியில் கைகளில் தான் உள்ளது. இந்த ஊழலில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த தரப்பு என பலரது பெயர்கள் உள்ளது. ஆனால் இந்த அறிக்கை இன்றுவரை மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கவும், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றார் என்றே கருதுகின்றோம். இன்றுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஊழல் குறித்து வாய் திறக்காது உள்ளார்.

ஆகவே மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் இறுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்துள்ளார் என்ற சந்தேகம் எம் மத்தியில் உள்ளதாகவும் ஜே.வி.பி.சுட்டிக்காட்டியது.

ஜே.வி.பி.யின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துனெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.