இலங்கையில் இயங்குகின்ற சகல சர்வதேசப் பாடசாலைகளும் கல்வியமைச்சில் பதிவுசெய்யப்படுவதைக் கட்டாயமாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
சர்வதேசப் பாடசாலைகள் உகந்த தராதரங்களைப் பேணுகின்றனவா என்பதை இந்த கட்டாயப்பதிவின் மூலம் உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்திருக்கிறார்.
” நாட்டில் எத்தனை சர்வதேசப்பாடசாலைகள் இயங்குகின்றன என்பதையும் எம்மால் உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.இந்த பாடசாலைகள் மிகப்பெருந்தொகைப் பணத்தை கட்டணமாக அறவிடுவதாகவும் அவற்றின் கல்வித்தரம் குறித்தும் பெருமளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஒரு வகுப்பில் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, வசதிக்குறைபாடுகள், ஆசிரியர்கள் சிலரின் கல்வித்தராதரம் ஆகியவை பிரச்சினைக்குரியவையாக இருக்கின்றன” என்று காரியவாசம் குறிப்பிட்டார்.
குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொள்வதற்கு சர்வதேசப்பாடசாலைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அவ்வாறு நிவர்த்திசெய்யாத பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.சர்வதேசப்பாடசாலைகள் வெறுமனே வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கல்வியமைச்சர் கூறினார்.