இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை -ஜி. எல்

265 0

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை   தமிழ்  தேசிய  கூட்டமைப்பு வழங்கவில்லை. சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில்  முரண்பாடுகளை தோற்றுவிக்கவே முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என  பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர். ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

ஐக்கிய   நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் இராணுவத்தினருக்கு எதிராக  தொடர்ந்து சர்வதேச  அமைப்புக்களினால்  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இவற்றிற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது   பொருத்தமற்ற செயற்பாடாகவே கருதப்படும். 

இறுதிக்கட்ட  யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றது என்று இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இதுவரை காலமும்  உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில்  உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே சர்வதேசமும் இவ்விடயத்திற்கு முக்கியத்துவம்  கொடுப்பது பயனற்றது.

 நாட்டில் இனங்களுக்கிடையிலும்,   தேசிய மட்டத்திலும் நல்லிணக்கத்தினை  கட்டியெழுப்ப  இராணுவத்தினர்  வழங்கிய பங்களிப்பினை   தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் இதுரை காலமும்   முன்னெடுக்கவில்லை. 

  யுத்த களத்திலும், அதற்கு   அப்பாற்ப்ட இடங்களிலும் இராணுவத்தினர் முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் பலர் இன்றும்  விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  இவற்றை சிவில் குற்றங்களாகவே கருத வேண்டும் . இவ்விடயத்தில்   நாங்கள் எவ்விதமான எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை.

  வடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன்    நல்லுறவுடனே   செயற்படுகின்றனர். இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என்று    பாதிக்கப்பட்ட மக்கள்  இன்று போராடுகின்றார்கள்.  தமிழர்களுக்கு இராணுவத்தினரை  சர்வதேசத்தில் குற்றவாளிகளாக   அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. இதனால் எவ்வித நன்மையும் எவருக்கும்  ஏற்படாது. ஆனால் இவ்விடயத்தில்  கூட்டமைப்பினரே தொடர்ந்து முறையற்ற விதத்தில் செயற்படுகின்றனர்.

 மனித உரிமை பேரவையில்   இராணுவத்தினரை குற்றவாளிகளாக்கும்   விடயத்தில்  புலம்பெயர்  விடுதலை புலிகளின் அமைப்புக்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் மாதம்   மனித உரிமை பேரவையில் விவாதங்கள் இடம் பெறும்  இவ்விவாதத்தில் கலந்துக் கொள்ள  கூட்டமைப்பினரும். தமிழ் அரசியல் கட்சிகளும்   ஐ. நா. செல்வார்கள்  அங்கும் நமது நாட்டினை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும்   செயற்பாடுகளை மாத்திரமே முன்வைப்பார்கள்.

 மனித உரிமை இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியே  அமெரிக்கா விலகிக் கொண்டது.  இதனை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2015, 2017ஆம்  ஆண்டுகளில்   காலசகாசம் பெற்றுக் கொண்டதை  போன்று  இம்முறையும் காலசகாசம் பெற்றுக் கொள்ளாமல்   இலங்கைக்கு ஒரு நிரந்தர தீர்வை   பெற்றுக் கொள்ளும் யோசனைகளை   அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.