இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது!

286 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும்  ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டு வருட நிறைவையும்  ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் மார்ச் மாத அமர்வினையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும்,

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஏகோபித்த குரலில் ஒலிக்கவேண்டும் என்றும்  சர்வதேச சட்டம் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில்மாற்று வழிமுறைகளை ஐ.நா சபை இலங்கை விடயத்தில் இனிமேல் கையாள வேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம்  தவறியுள்ள நிலையிலும் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுவரும் நிலையிலும் அவற்றை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் கட்டாயமாக அலுவலகங்களை திறக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனை புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவுக்கு சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திர மட்டங்களில் எடுத்துரைக்கவேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.