முல்லைத்தீவு மல்லாவி பிரதேச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்ட போதும், அதற்கான சத்திரசிகிச்சைக்கூடம் மற்றும் இரத்த வங்கி என்பன அமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், பல்வேறு தேவைப்பாடுகள் நிறைந்த வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு நகரத்திலிருந்து மேற்குப்புறமாக சுமார் எண்பது கிலோமீற்றருக்கும் அப்பால் அமைந்துள்ள மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வைத்திய தேவைகளை வழங்குகின்ற ஒரு வைத்தியசாலையாக காணப்படும் மல்லாவி வைத்தியசாலை கடந்த 2017ஆம் ஆண்டில் ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட வைத்தியசாலையின் தேவைகள் இதுவரை பூர்த்திசெய்யப்படவில்லை குறிப்பாக இந்த வைத்தியசாலைக்கான சத்திரசிகிச்சைக்கூடம் மற்றும் இரத்த வங்கி என்பன இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் இந்தப் பிரதேசங்களில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாது இவ்வைத்தியசாலையிலிருந்து ஐம்பது கிலோமீற்றருக்கும் அப்பால் உள்ள கிளிநொச்சி மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.
இதனைவிட, குறித்த வைத்தியசாலையானது, ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்ககான எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களும் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
ஆகவே இவ்வைத்தியசாலைக்கான சத்திரசிகிச்சைக்கூடம் மற்றும் இரத்த வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த வைத்தியசாலைக்கான இரத்த வங்கி மற்றும் சத்திரசிகிச்சைக்கூடம் என்பவற்றுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆத்துடன், இந்த வைத்தியசாலையினுடைய சகல கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,இதற்கான நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அவற்றை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.