எதிர்வரும் காலங்களில் தனியார் துறையினருடன் மேலும் நெருக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையில் நெருக்கமான இடைத்தொடர்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையிலுள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு நிகழ்வொன்று ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர்,
நாட்டில் கடந்த ஓக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிநிலை நாட்டின் பொருதாரத்தை மிக மோசமாகப் பாதித்தது. வெளியக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை டிசம்பர் 17ஆம் திகதியின் பின்னர் சீர்செய்து வருகின்றோம்.
இந் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தினால் இடைநிறுத்தப்பட்ட கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை வொஷிங்டனில் நடத்தியிருந்தோம்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.