சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் பறிமுதல்

269 0

பசளை தயாரிப்பிற்காக மாட்டுச்சாணம் கொண்டுசெல்லும் பாணியில் தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை மட்டக்களப்பு – புல்லுமலை வட்டார வன காரியால அதிகாரிகள் புதன்கிழமை (20) கைப்பற்றியுள்ளனர்

மட்டக்களப்பு- தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இம்மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட டிப்பர் வண்டியின் சாரதி மற்றும் நடாத்துநரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வன காரியாலய அதிகாரி என். செல்வநாயகம் தெரிவித்தார்.

இந்த வாகனத்தில் தேக்கு மரக்குற்றிகளை ஏற்றி அதன்மேல் மாட்டுச்சாணம் ஏற்றப்பட்டு சூசகமான முறையில் கொண்டு செல்லப்பட்ட வேளை வன காரியாலய அதிகாரிகளுக்குக்கிடைத்த இரகசியத்தகவலொன்றையடுத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாகனத்தில் 42 தேக்கு மரக்குற்றிகள் காணப்பட்டுள்ளன. இம்மரக்ககுற்றிகள் தொப்பிகல அரசாங்க காட்டில் வெட்டப்பட்டு வியாபாரத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டவேளை மாவடியோடை பிரதேசத்தில் வழிமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.