காலாவதியான திகதியுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தோருக்கு தண்டம்

258 0

காலாவதியான திகதியுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத ஐந்து வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட பாவனையாளர் விவகார அதிகாரசபை அலுவலர்கள் தென்மராட்சி பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, கண்டு பிடிக்கப்பட்ட திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நான்கு வர்த்தகர்களுக்கும் வர்த்தக நிலையத்தில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகருக்கும் எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் தனித்தனியாக வழக்கு  தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, திகதி காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நான்கு வர்த்தகர்களுக்கு மொத்தமாக 18 ஆயிரம் ரூபாவும், பொருட்களின் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகருக்கு ஆயிரத்து 500 ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது.