மறைப்போம் அழிப்போம் என கட்சி நலன் சார்ந்து செயற்படுபவர்களின் மத்தியில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகள் இடம்பெற்றிருந்ததன் அடையாளமாக காணப்படும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு சூட்டப்பட்ட பெயரை மறைக்கும் அல்லது மாற்றும் கங்கணம் ஏற்புடையது அல்ல என முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஒரு வார்த்தைக்குள் சிந்திக்க தோன்றியும், மக்களை நேசித்து சுயநலன்களை முன்னெடுக்காமல் மக்களின் நலனுக்காக அபிவிருத்திகளை முன்னிறுத்தி செயற்பட்டவரின் பெயரை மூன்று தசாப்தங்களின் பின்பாக, மாற்றி அமைக்கும் இவ்வாறான முயற்சியானது, தமிழர் நலனை அடிப்படையாக கொண்டதாக கூறி, தமிழர்களின் இறைமையை அடகு வைத்திருப்பவர்களின் நிகழ்ச்சி நிரலே முன்னெடுக்கப்படுகின்றது.
எக் காரணம் கொண்டும் மக்களால் வெகுவிரைவில் பாடம் புகட்டப்பட இருப்பவர்களின் செயற்பாடுகளை ஏற்றுகொள்ள முடியாது.
அன்று எமது மக்களால் உருவாக்கப்பட்டவர்கள் இன்று எமது மக்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறார்கள். ஆனால் அன்று துரோகி என பட்டம் சூட்டியவர்களே இன்று எமது மக்களை பல தசாப்தங்களாக ஏமாற்றி உள்ளனர். இன்று மக்கள் அவற்றை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். வெகு விரைவில் அறிவு பூர்வமாகவும் சிந்தித்து நிலையானவற்றை நிலைநிறுத்துவதற்காக நிதர்சனமான முறையில் விரைவில் இந்த ஆண்டு காலப்பகுதியில் உணர்த்துவார்கள். அன்று தான் உண்மையின் மனசாட்சி வெற்றியடையும் எனவும் குறிப்பிட்டார்.
ஆனாலும் பிற்படுத்தப்பட்டு இருந்த யாழ் பிரதேசத்தை மாநகரமாக்கியதன் மூலம், யாழ் நகரின் மேதையாக மக்கள் மனங்களில் இன்றும் திகழ்ந்து வருபவர் மறைந்த முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா எனவும் தெரிவித்தார்.
இன்று மட்டும் நிலைக்கட்டும் என சிந்தனை செய்யாமல், மக்களின் நீண்ட கால நலனை அடிப்படையாக கொண்ட திட்ட வரைபுகள் ஏதும் அவர்களது எண்ணங்களிலும், திட்டங்களிலும் அறவே இல்லை.
தமிழர்களது வரலாற்று திரிபுகளை ஏற்படுத்தும் அடையாள முயற்சியே இதன் நோக்கம். தமிழர் வரலாற்றில் இருபக்க பார்வைகள் உண்டு. அதனூடாக பலரும் பலவாறாக வரலாற்றை பதிவாக்கி, மக்களிடத்தே அவற்றை தெளிவாக்க முற்படுகிறார்கள். இனி வரும் சந்ததியினர்
இருவழி பாதையினையும்,இரு பக்க பார்வையினையும் புரட்டி பார்க்க தவற மாட்டார்கள் என்பதும் திண்ணம். ஊடகங்கள் ஊடாகவும், வாய் சவாடல்கள் மூலமும் மக்களை ஏமாற்றுவதோடு, அவர்கள் வாழ்வை நிர்க்கதியாக்கியும்,தம்மை தக்க வைப்பதற்காக செயற்படுபவர்களின் அடுத்த கட்ட செயற்பாடுகளை நிர்ப்பந்தப்படுத்தக் கூடிய சிறந்த பொறிமுறையை உருவாக்கி சர்வதேசத்துடன் பேச அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை, எனவும் மனித உரிமை பேரவை மூலம் மக்களை பாதுகாக்கும் தகுதியற்றவர்கள் அவர்கள் எனவும் தெரிவித்தார்.
நலிவுற்றிருக்கும் மக்களின் நாடிகளை மனதளவில் புரிந்து கொள்ளாமலும், நிகழ்காலத்தில் சிறந்த சிந்தனைகளினால் அவற்றை மீண்டும் சிதையாமல் பாதுகாத்து நிலைநிறுத்தாமல் தமிழர் நிலை மறந்து தமது சுயங்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
மக்களினது தேசாபிமானங்களை முன்னிறுத்தி செயற்பட்டமையினாலேயே, துரையப்பா மைதானம் மற்றும் அரங்கு இந்திய அரசினால் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு எமது இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கை இந்திய நல்லுறவை மேலும் வலுவாக்கும் செயற்பாடாகவும் அமைவதற்கு, துரையப்பா விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டு புதிப்பிப்பதற்கும் காரணமாக அமைந்திருந்தது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.