தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று லிந்துலை நகரை சுற்றி வளைத்த 8ற்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஒருமித்த கோரிக்கையை எழுப்பினர்.
இன்று காலை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தீவைக்கப்பட்ட பொம்மையை காவல்துறையினர் நீரூற்றி அணைத்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்
இருப்பினும், நோயாளர் காவுவண்டியைத் தவிர வேறு வாகனங்களைச் செல்லவிடாது மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும், அவர்கள் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.