ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீதான காவல் துறையினரின் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கும் படி பொறுப்பிலிருக்கும் அனைத்து தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி சேவையான டான் டிவி நிறுவனத்தின் செய்தியாளர் திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா குகராஜா காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 19 ம் திகதி2.30 மணியளவில் கொக்குவில் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை செய்திக்காக படமெடுத்துக் கொண்டிருக்கையில், பொறுப்பிலிருந்த கோப்பாய் காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி படமெடுக்க வேண்டாம் என்று அச்சுறுத்தி, தம்மீது தாக்குதல் நடத்தியதாக குகராஜா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் தமது பணியை சுதந்திரமாக மேற்கொள்ளவதற்கும் பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் இத்தகைய சம்பவங்கள் பெரும் தடையாகும். வடக்கிலும் தெற்கிலும் வன்முறைக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நியாயம் கிடைக்காதிருக்கும் ஒரு சூழலில், இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்களாகவே சுதந்திர ஊடக இயக்கம் நோக்குவதால் அதனை கண்டிக்கிறது.
எனவே, இந்த சம்பவத்தை உடனடியாக விசாரணை செய்து, தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயத்தைப் பெற்றுத்தருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.