முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தகவல் தெரிவிக்காவிட்டால் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறினார்.
காமராஜரின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா புஷ்பா எம்பி நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதிகாரிகள், மருத்துவர்கள், உடனிருப்பவர்கள் என யாரும் நிலைமையை வெளிப்படையாக கூற மறுக்கின்றனர்.
முதல்வர் இருக்கும் வார்டுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளான பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன், செங்கோட்டையன், மதுசூதனன், கோகுல இந்திரா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியவர் களைக்கூட அனுமதிக்கவில்லை.
புகைப்படத்தையோ, வாட்ஸ்-அப்பில் ஒரு அரை நிமிடம் பேசும்படியான வீடியோவையோ வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. முதல்வரின் உடல்நிலை குறித்து ஓரிரு நாட்களில் வெளிப்படையாக கூறாவிட்டால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன். இல்லையென்றால், எம்பி என்ற முறையில் மத்திய அரசிடம் பேசுவேன்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
புகைப்படத்தையோ, வாட்ஸ்-அப்பில் ஒரு அரை நிமிடம் பேசும்படியான வீடியோவையோ வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.