பெரும்பாலான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்குள் வந்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவரான அம்பிகை சீவரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகமான ஸ்கை நியூஸ் இல் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தமிழர்கள் பிரித்தானியாவுக்கான வீசாவை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனையடுத்தே அவர்கள் முகவர்களை நாடி போலி கடவுச்சீட்டுக்களையும், வீசாக்களையும் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அனுமானப்படி 80 முதல் 85 வீதமான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் பெரிய மற்றும் ஆபத்தான வர்த்தகமாகும்.
ஒவ்வொரு வருடமும் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வரும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கானோருக்கு ப்ராக்ஸிட் ஊடாக வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்று சீவரட்ணம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை போலியான வீசாவில் பிரித்தானியாவுக்கு வந்ததாக ஸ்கை செய்தியாளரிடம் அருள்சீலி ஸ்ரீதரன் என்பவர் கூறியுள்ளார்.
தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச்செல்ல முடியாது. அப்படி சென்றால் கொல்லப்படுவேன் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
ப்ராக்ஸிட் ஊடாக தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேவராஜா மற்றும் கெலி என்ற தமிழர்கள் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியபோதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேவராஜா 20 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தார். இவர்கள் ஒரு சிறிய அறையிலேயே வாழ்கின்றனர்.
இவர்களுக்கு பிரத்தானியாவில் வைத்து பிறந்த எட்டு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தாம் ஏனைய பிள்ளைகளை காட்டிலும் வேறுப்பட்ட விதத்தில் வாழ்வதால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்தப்பிள்ளைகள் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.