காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்த வேண்டும்

306 0

201610030729339952_government-of-karnataka-to-discuss-a-solution-to-the-cauvery_secvpfபிரதமர் நரேந்திர மோடி – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரடியாக தலையிட்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்தவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சிறிதும் எண்ணிப்பார்க்காமல் தொடர்ந்து மீறி வருகிறது. இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகும் தமிழக விவசாயிகளின் துன்ப நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.

தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை நிறைவேற்றாமல், அனைத்துக்கட்சி கூட்டம், அமைச்சரவை கூட்டம், சட்டமன்ற சிறப்பு கூட்டம் ஆகியவற்றை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசியல் சட்ட நெருக்கடியையும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.

கூட்டாட்சி முறைக்கு குந்தகம் விளைவிக்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத் தவிர்த்திட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டியவர்கள், நெருக்கடியை ஏற்படுத்திடும் போக்குக்கு ஆதரவளிப்பது வேதனை தருகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.-வை சேர்ந்த அனந்த குமார், சதானந்த கவுடா, உமாபாரதி ஆகிய மந்திரிகள், தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும், முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதும் கெட்ட வாய்ப்பாகும்.

எனவே கொதிநிலையை அடைந்து விட்ட இந்தப் பிரச்சினையில், நிர்வாக ரீதியாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருப்பதால் பிரதமர் மோடியும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அரசியல் ரீதியான கடமை இருப்பதால் சோனியாகாந்தியும் நேரடியாகத் தலையிட்டு, பிரச்சினை திசை திரும்பிப் போய்விடாமல், தீர்வுகாணும் நோக்கில், விளைவுகளை விளக்கி, கர்நாடக அரசை நல்வழிப்படுத்திட உடனடியாக முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.