தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனை-பழனி

303 0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஊடாக 20 ரூபாய் பெற்று கொடுக்கப்பட்டு தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள நிலையில் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தால் வரலாற்றில் முதல்முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50 ரூபா வீதம் சம்பளத்தை உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனை படைத்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட உள்ள ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் இன்று ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, வாடா, போடா என்று பேசுவதை தவிர்க்க கட்டுபடுத்தினாலும் என்னால் முடியவில்லை. 

தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிலுவை பணத்தை த.மு.கூட்டணி நிறுத்திவிட்டது என்று இப்போது சொல்கின்றார்களாம்.இப்படியானவர்களுக்கு எப்படி பதில் சொல்ல்வது. 

கடந்த காலத்தில் இடைக்கால கொடுப்பனவு என 3000 ரூபாயை பெற்று கொடுத்தோம் அப்போதும் இதனால் நிலுவைக்கு தடையேற்பட்டதாக தெரிவித்தனர். 

இம்முறை ஆயிரம் பெற்று தருவதாக சொல்லி அதற்கும் குறைவாக சம்பளத்திற்கு கைச்சாத்திவிட்ட இரண்டு களவானிகள் மக்களை ஏமாற்றி விட்டுள்ளனர். 

அத்துடன் பிரதமர் காரியாலயத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டதால் ஐ.தே.க ஏமாற்றிவிட்டது என மக்கள் குறைக் கூறுவதை ஏற்க முடியாத நிலையில் அரசுக்கு ஆதரவான த.மு.கூட்டணியின் ஆறு பேரும் அரசு தலையிட்டு 140 ரூபா சம்பளவுயர்வை பெற்றுதர வேண்டுமென கோரிக்கை விடுத்தோம் இல்லையேல் அரசை விட்டு விலகுவதாக அழுத்தம் கொடுத்தோம். 

இதன் பயனாக நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வரவு செலவு ஊடாக வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள வரலாற்றில் முதன் முறையாக வரவு செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பலத்தை மக்கள் வழங்கியதால் இவ்விடயத்தில் த.மு.கூட்டணி சாதனை படைத்துள்ளது. 

அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக அரசியல் பலத்தினால் பல சாதனைகளையும் படைத்துள்ளோம். 

அத்துடன் சம்பள உயர்வுக்கென அரசு 1300 மில்லியன் ருபாவை வழங்கியுள்ளது. 18 வருடம் அரசியலுக்கு வந்த நான் செய்துள்ள வேலைத்திட்டத்தில் 50 வருடம் அரசியல் செய்தவர்கள் செய்த ஒன்றை கூறட்டும் பார்க்கலாம் என்றார். 

வைத்தியர்களை தாக்குவது பொலிஸ் அதிகாரிகளின் குதிரையில் அமர்வதுதான் இவர்கள் செய்ததாகவும் என தெரிவித்த அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி பொகவந்தலாவையில் இந்திய வீடமைப்பு திறப்புவிழா நடைபெறவுள்ளது. 

சம்பளத்தை வரவு செலவு திட்டம் ஊடாக உயர்த்திய பிரதமர் இதில் கலந்து கொள்ள வுள்ளார். அத்துடன் நமக்கு திருப்பி செலுத்தாத கடன் மூலம் வீடமைப்பை உருவாக்கி வரும் இந்திய அரசு சார்பில் அதன் உயர்ஸ்தானிகரும் வருகின்றனர். 

இவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வுக்கு அனைவரும் அணி திரண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார். 

அத்துடன் எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஏமாறாமல் இருக்க அவர்களின் வருமானத்தை உறுதி செய்துகொள்ள சிறுந்தோட்ட உரிமையாளர்களை போலி பெருந்தோட்டங்களை பிரித்து கொடுக்க அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

அதேவேளையில் அரசியல் ரீதியாக பலம் தந்த மக்கள் தொழிற்சங்க ரீதியாக பலத்தை வழங்கினால் கம்பணிகளுடன் பேரம் பேசி சம்பள உயர்வை பெற்று தருவோம் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.