கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீடு), புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும கூறினார்.
இலங்கை – நியூசிலாந்து வர்த்தகப் பேரவையில் வைத்து, முதலீட்டாளர்களை கடந்த சனிக்கிழமை (01), சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்துப் பேசியதாவது, ‘நியூசிலாந்துப் பிரதமர், இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த போது, கைத்தொழிற்றுறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம். விசேடமாக, நியூசிலாந்து நிறுவனங்கள் முதலிடுவது குறித்தே அப்போது பேசப்பட்டது.
இவ்வாறான நிலையில், நியூசிலாந்தில் இருக்கின்ற இலங்கை நிறுவனங்கள், இலங்கையில் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய சந்தை மற்றும் புதிய உற்பத்திகள் தொடர்பில் கண்டறியப்படல் வேண்டும். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆகையினால், புதிய முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில், புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும். தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் காணிக்கான குத்தகை என்பன, இன்னும் பிரச்சினையாகவே இருக்கின்றன. அவை தொடர்பில் கலந்தாலோசித்து, தீர்வு காணப்படல் வேண்டும். முதலீடு செய்வதற்கு புதிய இடங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம். தனியார்த் துறைகளைப் பார்க்கின்றோம்.
இவ்வாறிருகையில், நியூசிலாந்தில் இருக்கின்ற இலங்கை முதலீட்டாளர்களால், ஏன் இலங்கைக்கு வரமுடியாது. முதலீடுகளைப் பற்றி பேசுகின்ற நான், எவ்விதமான முதலீட்டையும் செய்ததில்லை என்று பலரும் எண்ணக்கூடும். அவ்வாறல்ல, முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதே முக்கியமானதாகும். விவசாயத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
கிராமிய விவசாயத்துறையை, தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவகையில் மாற்றவேண்டும். நிர்மாணத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கமைவாக நிதித்துறைசார் நகரத்தை உருவாக்கவேண்டும். ஆகையால், கிடைத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது தொடர்பில், முதலீட்டாளர்கள் கவனஞ்செலுத்தி, கரிசனை காட்டவேண்டும்’ என்று, பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.