அருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

307 0

புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் கொழும்பு முகத்திடலில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்ட புத்தளம் அருவக்காடு சேராக்குளி பகுதியில் தமது உள்ளுராட்சி மன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் கொட்டுமாறு பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் புத்தளம், சிலாபம் நகர சபைகளுக்கும், புத்தளம் , கற்பிட்டி, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச சபைகளின் தலைவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கடிதமூலம் உத்தரவிட்டுள்ளார்.

இதனை கண்டித்தே புத்தளம், கரைத்தீவு, தில்லையடி, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் வைத்தியசாலைகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்கள் , பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு  பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், மூவின மக்கள் ஒன்றினைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான பியங்கர ஜயரத்ன, சனத் நிசாந்த, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் அன்டனி உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீ.மு.கா, ஐ.தே.க, ஸ்ரீ.சு.க, அ.இ.ம.கா, ஸ்ரீ.பொ.பெரமுன, ஜே.வி.பி, ஐ.ச.௯ட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மூவின சமயத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.