2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டுள்ளன.
பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்கள பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சையானது புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என இரு பரீட்சைகளாக நடைபெறும்.
பரீட்சார்த்திகள் விண்ணப்ப படிவங்களை பூரணப்படுத்தும் போது தான் தோற்றும் பாடத்திட்டம் எதுவெனச்சரியாக இனங்கண்டு அதற்கேற்ப விண்ணப்ப படிவங்களை பூரணப்படுத்த வேண்டும்.
மேற்படி பரீட்சைக்கு தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்ப படிவங்கள் 2019 பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தில் நகர எண்ணையும் பாட எண்ணையும் குறிப்பிடும் போது சரியான எண்ணைக் குறிப்பிடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆகக் கூடுதலாக பிரதான 3 பாடங்களுக்கு தோற்றுவதற்கு விண்ணப்பதாரிகளுக்கு இடமளிக்கப்படும்.
பாடசாலைகளில் இருந்து பாடசாலை விடுகைப்பத்திரம் பெற்றவர்கள் மட்டுமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்ற முடியும். பாடசாலையில் கற்றுக் கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றினார் என அறியப்படுமிடத்து பரீட்சை பெறுபேற்றை இரத்து செய்து எதிர்வரும் காலங்களில் பரீட்சைகளுக்கு தோற்ற தடை விதிக்கப்படும்.
இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு 011-2784208, 011-2784537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.