இலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு தற்போதைய அரசாங்கமே காரணமாகியுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கான சூழலை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் குறிப்பிடுவதைப் போன்று உள்நாட்டில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள முடியும். அதனை விடுத்து இந்த விடயத்தில் சர்வதேச தலையீட்டினை ஏற்படுத்தியமை முட்டாள் தனமான விடயமாகும்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பினை ஜனாதிபதி முதற்கொண்டு சர்வதேச நாடுகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். சுயாதீனமாக செயற்படக் கூடிய நீதித்துறை இலங்கையில் இருக்கும் போது யுத்த குற்ற விசாரணைகள் மாத்திரம் சர்தேசத்திற்கு எடுத்து செல்லப்பட்டது ஏன் என்பதே எமது கேள்வியாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை புதிய பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.