அனுமதிப் பத்திரமின்றி மின்சார வாள்களை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வாள்களை வைத்திருப்பவர்கள் அதுபற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, பிரதேச செயலகத்தின் ஊடாக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸாரும் கிராமிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துக் கள அலுவலர்களும் இது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அனுமதிப் பத்திரமின்றி இந்த மின்சார வாள்களை தம்வசம் வைத்திருந்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்குவது குறித்து விரைவில் வர்த்தமானி பத்திரம் மூலம் அறிவிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மின்சார வாள்களை நாட்டுக்குக் கொண்டுவரும் வர்த்தக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதுபற்றிய தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.