தமிழீழ தேசிய கொடியை ஏந்தி இளையவர்கள் அரங்கேறிய பொழுது மக்கள் கை தட்டி ஆரவாரித்தார்கள். சங்க நாதம் முழங்க எழுச்சி இசை ஒலிக்க “எமது நிலம்” என அரங்கில் இருந்த எழுச்சி முழக்க குழுவினர் முழங்க மக்கள் “எமக்கு வேண்டும்” என முழங்கினார்கள்.
கனடா தமிழ் இளையோர் எழுச்சியோடு ஆற்றிய எழுச்சி உரையில் பின்வரும் செய்திகளை முழக்கமாக முன்வைத்தார்கள்:
“ஒடுக்கப்பட்ட இனம் போராடுவதும், ஒடுக்குமுறைகளை ஒழிக்க போராட்டம் ஒன்றே ஒரே வழி என்பதும், உலக போராட்ட வரலாறுகள் எங்கும் கண்ணுற்ற உண்மைகள்.
ஆனாலும் என்னவோ தமிழினம் போராடினால் மட்டும் உலகம் அதை தீவிரவாதம் என்கின்றது.
அகிம்சை முறையில் தமிழினம் தனது உரிமைகளுக்காக போராடுவதையே இலங்கை தீவில் ஆட்சி செய்யும் சிங்கள பேரினவாதம் தீவிரவாதம் என்கின்றது என்றால் எத்தகைய உரிமை இழந்த நிலையில் எங்கள் மக்கள் அங்கு வாழுகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக புரிந்து கொள்ள முடியும்.
உலக நாடுகள் யாவும் மனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசுகின்றன. ஆனால் ஈழத்து தமிழ் மக்களுக்கு நடைபெற்ற கோர இனப்படுகொலையை பற்றி பேச மனிதம் உள்ள மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை.
எங்களுக்காக யாரும் இல்லாது போனாலும் எங்களுக்காக தமிழர்கள் நாங்கள் இருக்கின்றோம் என சொல்லி எழுவதே எழுக தமிழ்!
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் அகிம்சை வழியில் போராடிய பொழுது மறுக்கப்பட்டதால் தான் அது ஆயுத போராட்டமாக மாறியது.
ஆயுத போராட்டம் 2009 இல் மௌனிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னமும் எம் மக்களின் அவலங்கள் தீரவில்லை.
பூமி பொறை உடைக்கையில் எரிமலைகள் எழுந்து வெடிக்கின்றன… இது தமிழினம் பொறை உடைத்து எழும் காலம்!
இனியும் அரசை தமிழ் மக்கள் நம்பி பயன் இல்லை. மாற்றங்கள் நிகழ வேண்டும்.
இளைய தமிழர்கள் மாற்றங்களை உண்டு பண்ணும் சக்தியாக உலகெங்கும் உருவாக வேண்டும்!
அன்று அஞ்சி வாழ்ந்த தமிழ் மக்கள் எழுக தமிழ் நிகழ்வில் யாழ் முற்றவெளியில் வரலாறு படைத்தார்கள்.
அதே போல் ஜெனீவாவிலும் ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகள் எழுச்சி கொண்டார்கள்.
இன்று இதோ கனடிய மண்ணில் “எழுக தமிழ்!” முழக்கத்தோடு நீங்கள்!
கனடா வாழ் தமிழ் மக்கள் தாயகத்தில் உணர்வோடு போராடிய மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய கடமை உடையவர்களாக இருக்கின்றோம்.
தமிழகம், தமிழீழம் இரண்டுக்கும் அடுத்தபடியாக அதிகமான தமிழ் மக்கள் வாழும் நாடு கனடா ஆகும்.
மாண்டான் தமிழன் என்ற வரலாற்றை மாற்றி மீண்டு எழுந்தான் என வரலாறு படைக்க உலக தமிழினம் ஒன்றுபட்டு எழ வேண்டும்.
தமிழர் வாழும் இடமெல்லாம் தமிழினம் எழுச்சி கொள்ள வேண்டும்!
ஊர் ஊராக, தேசம் தேசமாக, உலக தமிழினம் வேற்றுமைகள் பிரிவினைகள் துடைத்து ஒன்று பட்டு எழ வேண்டும்!
நாளைய சந்ததியேனும் விடுதலை காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே இனிய இளைய உயிர்களை அள்ளி அள்ளி வார்த்தார்கள் எம் மாவீரர்கள்.
ஆம் நாம் வாழ அவர்கள் உயிர் கொடுத்தார்கள் என்பதை இளைய தமிழர்கள் நாம் மறந்து போக முடியாது. இளையவர்கள் கையில் எதிர்கால போராட்டம் என நம்பிக்கையோடு சொன்ன எங்கள் தலைவர் மாமா பாதையில் தமிழீழ தாயகத்தை வென்றெடுக்கும் வரையில் இளம் தமிழர்கள் எங்கள் தாகமும் என்றும் தணியாது!
மாவீரர்கள் கனவுகளை புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் நிலம் மறவா தமிழ் இளையோர்கள் நாங்கள் பாதுகாக்கின்றோம். அவர்கள் கனவை எங்கள் தோளிலும் சுமப்போம். விடுதலை வரை இனி ஓய மாட்டோம்!”
செய்தித் தகவல் :
செந்தமிழினி பிரபாகரன்