தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா?

282 0

தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.

தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.

சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) கலந்துகொண்டு பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

நிதி பற்றாக்குறை

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):–தமிழகத்தில் நிதி பற்றாக்குறை அதிகரித்து விட்டது. கடன் சுமை அதிகமாகி விட்டது.

ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்–அமைச்சர்):–மத்திய அரசின் நிதி பகிர்வு நமக்கு கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதனால் நமக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நம்முடைய பற்றாக்குறை கூடவில்லை. ஜி.எஸ்.டி. வரி மத்திய அரசுக்கு பெருமளவு சென்று விடுகிறது. நமக்கு 2 வரிகளை தவிர வேறு எதுவும் இல்லை. மக்கள் மீது வேறு வழிகளில் வரி விதிக்கவும் நாங்கள் விரும்பவில்லை.

கே.ஆர்.ராமசாமி:–நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசு குறித்து….

ஓ.பன்னீர்செல்வம்:–காரைக்குடி பொதுக்கூட்டம் போல் பேசக்கூடாது. மத்தியில் உங்கள் ஆட்சி இருந்தபோதும் தமிழகத்திற்கான நிதி குறைக்கப்பட்டது. அன்றைக்கு தொடங்கி தற்போது வரை இது தொடருகிறது. உங்கள் ஆட்சியில் நிதி மந்திரியாக சிதம்பரம் தான் இருந்தார். அவரிடம் கேளுங்கள்.சண்டை போட முடியுமா?

கே.ஆர்.ராமசாமி:–10 ஆண்டுகளுக்கு பின்னால் ஏன் போகிறீர்கள். இப்போது உள்ள நிலையை கூறுங்கள். மத்திய அரசை ஏன் வற்புறுத்தி நிதியை பெறவில்லை. நாங்களும் உங்களுடன் போராட வருகிறோம். ஆனால் நீங்கள் எதையோ மனதில் வைத்து மத்திய அரசுடன்….

ஓ.பன்னீர்செல்வம்:–எதையும் கேட்டு தான் பெற முடியும். கத்தி வைத்து சண்டை போட சொல்ல முடியுமா?

கே.ஆர்.ராமசாமி:–உங்கள் நிலை எனக்கு தெரியும். அதில் இருந்து நீங்கள் விடுபட முடியாது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:–நாங்கள் யாரிடமும் சிக்கவில்லை. தமிழகத்தின் நன்மைக்காக தொடர்ந்து வற்புறுத்தி நிதியை பெற்று வந்திருக்கிறோம்.

கே.ஆர்.ராமசாமி:–நீங்கள் யாரை நிதி மந்திரியாக இருந்தார் என்று சொன்னீர்களோ? அவர்தான் திரும்பவும் நிதி மந்திரியாக வர போகிறார். அப்போது நாங்கள் பெற்று தருவோம்.

அமைச்சர் தங்கமணி:–யாரையும், யாரும் மிரட்டவில்லை.தேர்தலை கண்டு அச்சம்

ஓ.பன்னீர்செல்வம்:–கூடா நட்பு கேடா முடியும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உங்களை பார்த்து தான் சொன்னார்.

மு.க.ஸ்டாலின்:–குட்கா வழக்கில் சிக்கி யார் வீட்டில் சோதனை நடந்தது. ஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா தொடர்பாக யார் வீட்டில் சோதனை நடந்தது, தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சரின் அறையிலே சோதனை நடத்தப்பட்டது. இதையெல்லாம் மூடி மறைத்து பேசுவது சரியா?.

கே.ஆர்.ராமசாமி:–கூடிய விரைவில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அப்போது யார்? யாருக்கு பயப்படுகிறார்கள் என்பது தெரிய வரும். உள்ளாட்சி தேர்தலை ஏன் நீங்கள் நடத்தவில்லை. நீங்கள் தேர்தலை கண்டு அஞ்சுகிறீர்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை, 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவில்லை. திருவாரூர் தேர்தல் தள்ளிப்போனது ஏன்?. நீங்கள் எதை தடுத்தாலும் நாடாளுமன்ற தேர்தலை தடுக்க முடியாது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:–வார்டு வரையறை பணிகள் நடந்து வந்தது. இது குறித்து நிறைய விளக்கம் ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.பயம் இல்லை

மு.க.ஸ்டாலின்:–தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் தி.முக. கோர்ட்டுக்கு சென்றது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:–18 தொகுதிக்கும் வழக்கு இருக்கிறது. தேர்தலை, தேர்தல் கமி‌ஷன் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறது. எங்களுக்கு தேர்தலை கண்டு பயம் இல்லை.

எஸ்.பி.வேலுமணி:–தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். உங்களால் அது முடியுமா?

கே.ஆர்.ராமசாமி:–பா.ஜ.க. உங்களுடன் கூட்டணி வைத்தால் உங்களுடன் எந்த கட்சி கூட்டணிக்கு வர தயாராக இருக்கும்?

அமைச்சர் ஜெயக்குமார்:–யாருடைய முதுகிலோ ஏறி பயணிப்பது தான் உங்கள் தேர்தல் நிலைப்பாடு.

கே.ஆர்.ராமசாமி:–நீங்கள் ஜெயலலிதாவால் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.

(அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆமாம், ஆமாம் என்று குரலிட்டனர்)

கே.ஆர்.ராமசாமி:–ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நீங்கள் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்து பாருங்கள் உங்கள் நிலை தெரியும். ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவியிருக்கிறீர்கள்.

செங்கோட்டையன்:–கூட்டுறவு சங்க தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்.தனித்து போட்டி

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:–ஜெயலலிதாவின் செல்வாக்கால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம். இது உண்மை. நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?. நீங்கள் சொந்த செல்வாக்கிலா வெற்றி பெற்றீர்கள்.

கே.ஆர்.ராமசாமி:–உங்களுடைய பலத்தை நிரூபிக்க தேர்தலை நடத்துங்கள்.

ஓ.பன்னீர்செல்வம்:–1967–க்கு பிறகு நீங்கள் எப்போது தனியாக நின்று இருக்கிறீர்கள். தமிழகத்தில் எல்லா கட்சிகளும் தனியாக நின்றால், நாங்களும் நிற்க தயார்.

துரைமுருகன்:–இது ஆரோக்கியமான விவாதமா? நான் வேண்டுமானால் பேசாமல் இருந்து விடட்டுமா?

ஓ.பன்னீர்செல்வம்:–உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி, துரைமுருகனின் ஆலோசனையை கேளுங்கள். நீங்கள் நிதி பிரச்சினை சம்பந்தமாக பேசினால் பிரச்சினை வராது.ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்

கே.ஆர்.ராமசாமி:–நிதி பிரச்சினை இருக்கும் நிலையில், ரூ.2 ஆயிரம் வழங்குவது சரியா? இதன் உள்நோக்கம் என்ன?

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:–கடன் இருப்பதற்காக மக்கள் நல திட்டங்களை அறிவிக்காமல் இருக்க முடியுமா? இது ஏழை தொழிலாளர்களுக்கான திட்டம். இது வழங்குவது தவறா?

கே.ஆர்.ராமசாமி:–தவறு என்று நான் சொல்லவில்லை. ரூ.2 ஆயிரத்திற்கு பதில் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள். காரைக்குடியை மாநகராட்சியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் நிறைவேற்றாவிட்டால், எதிர்க்கட்சியாக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த கோரிக்கை வைக்கிறேன். உங்களுக்கு வாய்ப்பு வரும்போது, இதை நிறைவேற்ற வேண்டும்.கோவில் சொத்து

கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்லூர் ராஜூ:–இறைவனுக்கு எல்லோரும் பயந்தவர்கள் தான். கோவில் சொத்துகள் மீட்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்பட்டது.

இவ்வாறு விவாதம் நடந்தது.