ஊட்டி காந்தலில் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி காந்தல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். அப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காந்தல் பென்னட் மார்க்கெட், முக்கோணம் பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அந்த குப்பை தொட்டியில் கொட்டி வந்தனர். அதனை துப்புரவு பணியாளர்கள் நகராட்சி வாகனங்களில் சென்று அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக தரம் பிரித்து பொதுமக்கள் வீடுகளுக்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன.
இதற்கிடையே காந்தல் பகுதியில் சாலையோரம் மற்றும் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. காந்தல் முக்கோணத்தில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. மேலும் காற்று மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்துக்கு செல்ல அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வாகனங்களில் வரும் போது, முகத்தை துணியால் மூடியும், மூக்கை பொத்தியபடியும் செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. ஊட்டி காந்தலில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மற்றும் காய்கறிக் கழிவுகள் கொட்டுவது தொடர்கிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகளை தின்கிறது. ஒரு வேளை அவை பிளாஸ்டிக் பொருட்களை உண்டால், அதற்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு மற்றும் பசுமையை ரசிக்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளை பார்த்து, அவர்கள் ஊட்டியின் அவல நிலையை கண்டு வருத்தம் அடைகின்றனர். எனவே, சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி தீ வைத்து எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.