யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண மாணவர்கள் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் யாழ் இந்திய துணைத்தூரகத்தின் உதவியுடன் இதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் தூதுக்குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர் வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்ததுடன் மாணவர் பரிமாற்றம் தொடர்பில் இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது இந்திய தூதுரகத்தின் துணைதூதுவர்எ ஸ். பாலச்சந்திரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.