வவுனியா கள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியேறியுள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் காணி ஆவணங்கள் என்பன வழங்கப்படவில்லை.
அண்மையில் அரசாங்க அதிபருக்கு தனி நபர் ஒருவர் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதனை மீள்பரிசீலனை செய்யுமாறும் மேலும் அங்குள்ள மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப்பிரியோகித்து அரச அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அக்கடிதம் பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் கிராம அலுவலகரூடாக கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்தே அப்பகுதி மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அரசாங்க அதிபர் நேரடியாக தமது பகுதிக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்து மக்களுக்கான நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கடிதத்தினை வழங்கியுள்ளனர்.
கடிதத்தினைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் தற்போது வழங்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் குறித்து ஒரு முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் மாவட்ட மட்டத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வீட்டுத்திட்டங்களை வழங்க பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதேச செயலாளருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட செலயகத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.