முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
நேற்றையதினம் குறித்த விகாரை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதிவழங்கியது மன்றில் தோன்றி விளக்கம் அளிப்பதத்தற்காக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டவல முல்லைத்தீவு மாவடட நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார் .
மாவட்ட நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு மிக நீண்டநேரமாக இடம்பெற்றது .
இதில் பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் சட்டத்தரணி காண்டீபன் மற்றும் முல்லைத்தீவு மாவடட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் வாதாடினார் .
நீதிமன்றில் ஆஜராகிய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குறித்த சர்சைக்குரிய பிரதேசம் ஒரு தொல்பொருள் சின்னமாக தாம் அடையாளபடுத்தியுள்ளதாகவும்,இந்த பகுதியில் விகாரை கட்டுவதற்கு அனுமதி வழங்க தமது தொல்பொருள் திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனவும் வேணும் என்றால் தாம் சிபாரிசை(Recommendation) வழங்க முடியும் எனவும் கட்டுமானங்கள் செய்வதற்கு உள்ளூர் திணைக்களங்கள் மூலம் அனுமதிகள் பெறப்படவேண்டும் எனவும் தெரிவித்தார் .
அத்தோடு குறித்த தொல்பொருள் பிரதேசம் தொடர்பில் நில அளவை செய்யப்பட்டு பூரணமான ஒரு வர்த்தமானி அறிவித்தலை தாம் வெளியிடவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மன்றில் தெரிவித்தார் .
மேலும் பிள்ளையார் ஆலயம் இருப்பதற்கான ஆதாரங்களும் ஏற்கனவே பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை இருந்த புகைப்பட ஆதாரமும் பின்பு கணதேவி தேவாலயம் என விகாராதிபதியால் பெயர் மாற்றப்பட்ட பெயர்ப்பலகை இருக்கின்ற புகைப்பட ஆதாரமும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது .
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் தீர்ப்புக்காக குறித்த வழக்கை எதிர்வரும் 26,02,2019 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் .அதுவரையில் குறித்த சர்சைக்குரிய பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருதரப்பும் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் மன்று கட்டளையிட்டது .
இந்த நிலையில் பிள்ளையார் ஆலயம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் தொல்பொருள் திணைக்களம் குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதற்கான ஆதாரங்களை மன்றில் முன்வைத்து தொல்பொருள்த்திணைக்கள பணிப்பாளர் நாயகம் முன்னுக்கு பின் முரணான வகையில் கருத்துக்களை முன்வைப்பதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடனேயே சிங்கள பௌத்த தேசிய வாதத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் குறித்த விகாரைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு இங்கு கட்டுமானம் நடைபெறுவதாக பிள்ளையார் ஆலயம் சார்பாக வாதாடிய சடடத்தரணிகளால் மன்றுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.